Wednesday, March 16, 2005

சுனாமிக் களத்தில் செய்தியாளனாக....

வழமையானதோர் ஞாயிற்றுக்கிழமை போலவே அன்றும் இருந்தது. விடுமுறை நாளான போதும் முதல் நாளான கிறிஸ்மஸ் தின கொண்டாட்டங்கள் கிராமத்தினில் ஓய்ந்த பாடில்லை. 9.30 மணிக்கு ஆரம்பமாகும் வகுப்பிற்கு சற்று தாமதமாகவே செல்வதாக முன்தின இரவு தீர்மானித்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. வருடந்தோறும் நடாத்தப்படும் சமயம் சார்ந்த மாணவர்களிடையேயான பரீட்சை யொன்றிற்கான மேற்பார்வையாளராக வந்து உதவுமாறு முன்தினம் இரவுதான் அலுவலக நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர். நட்பின் நிமித்தம் பரீட்சை நடக்கும் உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை நோக்கி காலைவேளை புறப்பட்டேன். வழமை போலவே என்னுடன் இணைபிரியாத கமராக்கள் அடங்கிய "பாக்" உம் தோள்களில் ஏறிக்கொண் டது. பரீட்சைகள் திட்டமிட்டபடியே காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிவிட்டது. விடைத் தாள்களையும், கேள்விப்பத்திரங்களையும், வழங்கிக் கொண்டிருந்த அந்த அவசரகதியான வேளையில் சுமார் 10 மணியளவில் மழையிருட்டு போன்று மேகம் கறுத்திருந்தது. சாதுவான தூறலும் ஒரு புறத்தே பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் ஏனோ இனந்தெரியாத ஓர் அமைதி ஒரு புறத்தே நீடித்துக்கொண்டிருக்க மறுபுறத்தே அருகிலுள்ள வல்லைக் கடலில் ஓவென இரைச்சல் சத்தம். கடல் பக்கம் கடும் காற்றுப்போல இருக்கின்றது என சக நண்பரிடம் கூறிவிட்டு மேற்பார்வையில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த அமைதியான சூழலை கிழித்துக் கொண்டு இளைஞர்கள் சிலர் பரீட்சை மண்டபத்தி னுள் விரைந்து வந்தனர். அவர்கள் மிகவும் களைத்துப்போயிருந்தனர். முகங்களில் அச்ச உணர்வு மேலோங்கி நின்றது. என்னவென விசாரிப்பதற்காக அவர்களை நோக்கி விரைந் தேன். "அண்ணா கடல் ஊருக்குள் வந்து விட்டது. இப்ப தீருவில் தூபி தாண்டி வந்து கொண்டிருக்கிறது. எங்கட ஊர் பிள்ளையளும் பரீட்சை எழுதுகினம் அவையை எங்களோட அனுப்பிவிடுங்கோ" என்றனர் அவர்கள். ஆமி வருகின்றான் என்றோ அல்லது சண்டை தொடங்கிவிட்டது என்றோ கேள்விப்பட்டு பழகிப் போன எங்களிற்கு இது ஓர் புரியாத கதையாக இருந்தது. ஆனாலும் பிள்ளைகளை பத்திரமாக வீடுகளிற்கு அனுப்பி விட்டு ஒரிரு வினாடி களிற்குள்ளாகவே வல்வெட்டித்துறை நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் விரைந்தேன். வீதிக்கு வந்த வேளையில் தான் நிஜம் உறைத்தது. நனைந்த கோழிக்குஞ்சுகள் போல் மக்கள் உடுப்பிட்டிப் பக்கம் விரைவாக ஓடி வந்துகொண்டி ருந்தனர். அவர்கள் வந்த பாதை நோக்கி விரைந்து கொண்டிருந்த வேளையில் ஓடிவரும் மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கோண்டேயிருந்தது. தாண்டிச் செல்லும் வேளையில் செல்லுமி டத்தில் என்ன இருக்கப்போகின்ற தென்று ஏதுமே தெரியாத போதும், ஓரமாக எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஓடிவரும் மக்களை முதலில் கமராக்கள் மூலம் பதிவுசெய்தேன். பின்னர் தொடர்ந்தும் வல்வெட்டித்துறை சந்தியை அண் மித்த வேளையில் இளைஞர்கள் சிலர் நின்று போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டி ருந்தனர். குறிப்பாக வேடிக்கை பார்க்க வரும் கும்பல்களை அடித்து விரட்டுவதில் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஏற்கனவே அவர்களிற்கு பரிச்சயமான முகம் என்பதால் உட்செல்ல என்னை அனுமதித்த அவர்கள், பல தடவைகளாக கவனமாக இருக்கு மாறு ஆலோசனை கூறியே அனுப்பிவைத்தனர். கடற்கரைக்கு செல்லும் சிறிய வீதிகள் எங்கும் இடிபாடுகளால் மூடப்பட்டுவிட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை பிரதான வீதியோரமாக நிறுத்திக்கொண்டேன். ஏற்கனவே பழகிப்போன அந்தப் பகுதிக்குள் ஏனோ இன்று மட்டும் அந்நியப்பட்டு நிற்பது போன்ற உணர்வு. கமராக்களை தயார் செய்து காட்சிகளை பதிவு செய்தபடி கரை நோக்கி வருகின்றேன். உயிரிழந்த தந்தையை தூக்கிவரும் தனயன் ஒரு புறம், காயமடைந்த மனைவியை தூக்கியவாறு, தனது கைகளில் இரு சிறுபிள்ளைகளையும் இழுத்தவாறு ஓடி வரும் குடும்பத் தலைவன் ஒருபுறம். வழக்கமாக செய்தி சேகரிப்பிற்கென வந்து பழகிப்போன இடங்களே அவை. என்ன தான் நடக்கின்றதென புரிய வில்லை. அதை விளக்கிச்சொல்ல அவர்கள் எவருமே தயாராகவுமில்லை. ஆனாலும் ஏதோவொரு அசட்டு துணிச்சலுடன் கரை நோக்கி விரைகின்றேன். எத்தனை முறை கண்ட கடல். கரையோர வீடு கள். வியாபாரிகளாலும், மக்களாலும், மீனவர் களாலும் அமளிப்படும் அந்த கடற்கரை செத்துக் கிடந்தது. கடலிற்குள் நின்ற படகுகள் இன்று குடியிருப்புகளிற்கு நடுவே வீடுகள் இடிந்து தரைமட்டமாகி கிடக்கின்றது. கடல் கொண்டு வந்த மீன்கள் இன்னும் செத்துப்போகாமல் கிடந்து துடிக்கின்றன. உயிரிழந்த உறகளுக்காக அலறும் உறவுகள். காயமடைந்தவர்களது வலிகளுடனான கதறல்கள் என அப்பகுதி யெங்கும் ஒரே ஓலம். எல்லாவற்றையும் மேவி கடல் தாய் குமுறிக்கொண்டேயிருக்கிறாள். என்றுமே பார்த்திராத மாதிரி கடல் நீர் கரிய கறுப்பு நிறமாகவும், நீர் மட்டம் உயர்ந்தும், தணிந்து மென அரக்கியாய் நின்றாள். என்னைக் கண்டு கொண்ட மீனவசங்கப் பிரதிநிதியான குட்டித்தம்பி நான் நின்ற இடம் நோக்கி விரைந்து வந்தார். "அண்ணா மீண்டும் கடல் கொந் தளிக்கிறது, எந்த நேரமும் அலையடிக்கலாம். மீண்டும் தாக்குமுன் பாதுகாப்பாக வெளியேறி விடுங்கள்" என கூறியவாறு சகமீனவர்களை பாதுகாப்பிற்காக என்னு டன் நிற்கச் சொன்னார். எதை பதிவு செய்வது எதை விடுவது என முடிவு செய்யவோ, சிந்திக்கவோ நேரமில்லை. இயந்திர கதியில் முடிந்தவற்றை பதிவு செய்தபின் அங்கிருந்து வெளியேறி வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையினை நோக்கி விரைகின்றேன். ஆட்களற்ற சூனியப்பிரதேசமாக வீதி கள், அங்குமிங்கும் அச்சத்துடன் ஓடிக்கொண்டி ருக்கின்றேன். வைத்தியசாலையெங்கும் ஒரே அழுகுரல். கணப்பொழுதினில் உயிரிழந்த உறவுகளது உடல்கள் மீது அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச் சையேதுமின்றி வலிதாங்காது கத்திக்கொண்டி ருந்தனர். அம்புலன்ஸ் வண்டி கூட அற்ற நிலை யில் மீன் ஏற்றும் டிரக் வண்டிகளில் காயமடைந்த வர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதில் இளைஞர்கள் சிலர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். சற்று முன்னர் வந்து திரும்பிய கடல் நீர் மீண்டும் அங்கு வரலாமென்ற அச்சம் அனைவருக்கும். அங்கிருந்து வெளியேறிய நான் வல்வெட்டித்துறைக்கு அண்மித்துள்ள வல் வெட்டி பகுதிக்கு விரைகின்றேன். கைத்தொலை பேசிகள் தொடர்பு இழந்த நிலையில் தொலை பேசி வசதி இணைப்புடைய வீடொன்றுள் நுழைகின்றேன். உரிய அவகாசமேதுமற்ற நிலை யில் 10.30 மணிக்கு எனது அவதானிப்புகளை "சூரியன் எப்.எம்" வானொலியில் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக நேரடியாக நேயர்களுக்கு அஞ்சல் செய்கின்றேன். என்ன சொன்னேன் என்று இப்பொழுது கூட எனக்கு ஞாபகம் வர வில்லை. பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை, மணற்காடு மற்றும் குடத்தனை என எல்லாப் பகுதிகளிற்கும் விரைந்த பின் இறுதியாக மந்திகை வைத்தியசாலைக்கு விரைகின்றேன். பிரேத அறையெங்கும் நிரம்பி வழியும் சடலங்களும் காயமடைந்தவர்களது வேதனையுடன் கூடிய முனகல்களும் அழுகையுமாக அங்கு சொல்லில் வடிக்கமுடியாத உணர்வுகள். அந்தவோர் நிலையிலும் சக பத்திரிகை நண்பர்களை கண்டு கொண்டதில் ஓர் இனம்புரியாத நம்பிக்கை. இயந்திரக்கனமாய் செய்திகளை பதிவு செய்து கொண்டேயிருக் கின்றேன். எல்லோரிடமும் ஒட்டுமொத்தமாக ஓர் வெறுமையான உணர்வே தலைதூக்கியிருந்தது. எவருக்கும் எவரும் ஆறுதல் செய்யும் நிலையில் இல்லை. தொடர்ந்தும் எடுத்த செய்திகளையும் படங்களையும் எனது ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஈடுபட்டிருந்தேன். வெறுமையான அந்த நாட்களில் உணவு, உறக்கம் இழந்து பணிகளை மேற்கொண்டிருந்தேன் என்பதே உண்மை. ஆனாலும் தமது உறவுகளுக்காக ஒன்றுபட்டு பாடுபட்ட எனது தமிழ் மக்களது அர்ப்பணிப்பு நெக்குருக வைத்தது. அவர்களுள் நானும் ஒருவனாகிப் போனமையே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அத்துடன் உறவுகள் பற்றி கவலையுடன் இருந்த சர்வதேச நாடு களிலுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே இயலுமான வகையினில் செய்திகளை கொண்டு சென்றமையும் மனதுக்கு ஓர் திருப்தியினை அளித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த உறவுகளது அவலம் கண்டு திரண்டெழுந்த தமிழ் சமூகத்தை. திரண்டெழவைத்ததில் ஊடகங்களிற் கும் பங்குண்டு என்ற வகையில் அது எனக்கும் ஓர் திருப்திகரமான தொழிலாகவே அமைந்தது.

0 Comments:

Post a Comment

<< Home