Wednesday, March 16, 2005

உதயனின் சுனாமி செய்தி வழங்கல் எப்படி அமைந்தது?

"யாழ்ப்பாணத்தில் எந்தச் சம்பவம் நடந்தாலும் உடனடியாகவே சனம் எங்களிடம்தான் விசாரிக்கும். அன்று காலை 10.20 மணி. திருகோணமலையிலிருந்து அழைத்த ஒருவர், கிழக்கு மாகாணத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டு யாழ்ப்பாணத்தில் அவ்வாறு ஏதும் அனர்த்தம் நிகழ்ந்ததா என்று கேட்டார். இது வடமராட்சியில் மட்டுமல்ல, வடக்கு -கிழக்கு முழுவதிலும் நடந்துள் ளது என்பதை அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டோம். வடமராட்சியை சுனாமி தாக்கிய சில நிமிடங்களில் எமக்குத் தகவல் சொல்லுவதற்காகப் பல வாசகர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்கள். உடனே எமது அலுவலகச் செய்திப் பிரிவைச் சேர்ந்த எஸ்.வசந்தன், எஸ். அற்புதராஜ் ஆகியோரைப் படப்பிடிப்புக் கருவிகளு டன் வடமராட்சிக்கு அனுப்பிவைத்தோம். உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பணியாற்றுங்கள் என்றும் செய்திகளுடன் வந்து சேருங்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் கூறியிருந்தோம்......." என்று உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சுனாமி செய்தி வழங்கல் பற்றிய கதையை ஆரம்பித்தார். அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகேசு குமாரதாஸன். "எமது வடமராட்சி செய்தியாளர்களான சுந்தரலிங்கம், தில்லைநாதன், வடமராட்சி கிழக்குச்செய்தியாளர் குமார் ஆகிய மூவரும் சுனாமி பாதித்த இடங்களில் பிரசன்னமாகி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந் தோம். திரு. சுந்தரலிங்கம் பாதிப்புப் பற்றிய பல செய்திகளையும் புகைப்படங்களையும் தொடர்ந்து வழங்கிவந்தார். அவரது திறமையான பங்களிப்புக் காரணமாக அவரை எமது அலுவலகச் செய்தி யாளர்கள் `சுனாமி சுந்தா' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்...." என்று எமக்கு அருகில் பணியில் மூழ்கியிருந்தபடி பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அவர்கள் சிரித்துக்கொண்டு கூறினார். செய்தி சேகரிப்பதும், எமக்குச் சேர்ப்பிப் பதும் உடனடியாகக் களத்துக்குச் செல்வதும் என்ற பரபரப்புடன் அவர் பணியாற்றியதை விசேடமாகக் கூறலாம் - என்றும் திரு.கானையில்நாதன் அந்தச் செய்தியாளரைப் பாராட்டினார். அதனால் ஏனை யோர் பின்னுக்கு நின்றார்கள், அல்லது பிந்திப் போனார்கள் என்றல்ல-எனவும் தெரிவித்தார். வடமராட்சியிலிருந்து உதயன் சிறப்புச் செய்தியாளர் குழுவின் செய்தி அறிக்கையிடலை ஒரு பக்கத்தில் மறுநாள் பிரசுரித்தோம் என்றும் அவர்சுட்டிக்காட்டினார். தீர்மானகரமான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கைகளுக்குக் கிடைத்தவுடன் ஒரு விசேட மாலைப் பதிப்பை நீங்கள் வெளியிடவில் லையே என்று நான் கூறியபோது, "இரவு 11.30 மணிக்குத்தான் விடயங்களை ஓரளவு உறுதிப் படுத்த முடிந்தது. இழப்புகள், சேதங்கள் பற்றிய செய்திகள் கைகளில் குவியலாக இருந்தபோதும் ஓர் உத்தியோகபூர்வ தகவலாக அதைக் காட்டுவ தற்கு வழிவகையிருக்கவில்லை. அந்நிலையில், ஒரு மாலைப் பதிப்புப் பற்றி எங்களால் யோசிக்க முடியவில்லை. சரியாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஒரு பக்கமிருக்க, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேடபதிப்புமூலம் எவ்வகையில் உடனே உதவிசெய்ய முடியும் என்ப தையும் பார்க்கவேண்டும். எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டு அழிவும் சாவும் என்று நிலைமையி ருக்கும்போது, எமது அலுவலகப் பணியாளர்கள் கூட வடக்கு - கிழக்கில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தபோது விசேட பதிப்பு யாருக்கு யாரால் வழங் கப்படுகிறது என்ற நிலைமையை விளங்கிக் கொள்ளவேண்டும். அதனால் நாம் விசேட பதிப்புக் குறித்துச் சிறிதும் சிந்திக்கவில்லை. அப்போதைய நிலையில் அது அவசியமற்றது என்பதே எமது கருத்தும் முடிவுமாக இருந்தது - என்று சொன்னார் பிரதம ஆசிரியர். "எங்களைப் பொறுத்தவரையில் எதை எப்படிச் செய்வது என்று திணறிக் கொண்டிருக் காமல், சனத்தின்ரை கடைசி நிமிட அனுபவத்தை யும் முடியுமான அளவுக்குச் சரியான அளவில் இழப்புகளையும் பதிவுசெய்யத் தீர்மானித்தோம். வடமராட்சி கிழக்கில் அவ்வேளையில் நின்று கொண்டிருந்த அரசஅதிபரைக்கூடத் தொடர்பு கொள்வது மிகச் சிரமமாக இருந்தது..." என்று விளக்கினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன். "26ஆம் திகதி மதியத்திலிருந்து இரண்டு அலுவலகச் செய்தியாளர்களை யாழ். மருத்துவமனையில் நிலைகொண்டு விடயங்க ளைச் சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டோம். எஸ். பிரதீபன், என்.புஷ்பராஜா ஆகியோரை இதற்காக நியமித்தோம்" என்றார் செய்தி ஆசிரியர் குமாரதாஸன். "செய்தியாளர் சுந்தரலிங்கம், நெல்லியடியிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி ஸ்தலத்தின் நிலைமைகளை உடனுக்குடன் தரமுயன்றுகொண்டிருந்தார். தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தில்லை நாதனும், சுந்தரலிங்கமும் தாம் சேகரித்த செய்தி களுடன் உதயன் பணிமனைக்கு வருவதற்காக நீண்டநேரம் பஸ்ஸீக்குக் காத்திருந்தனர். பஸ் சேவைகள் அனர்த்தத்தையடுத்து பாதை மாற்றங்களுக்கு உட்பட்டிருந்ததால் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வந்து சேர்ந்தனர். அக்கட்டத்தில்தான் எமது போக்கு வரத்து, தொலைத்தொடர்பு முறை ஓர் அனர்த் தத்தால் செய்தி வழங்கலுக்குப் பொருத்தமில் லாமல் உள்ளதையும் ஒரு சிறிய குடாப் பகுதியான யாழ்ப்பாணப் பிராந்தியத்திலேயே சாத்தி யமில்லாமல் போவதையும் உணரமுடிந்தது" என்றும் அவர் மேலும் சொன்னார். உங்கள் வழமையான கடமையொழுங் கிலிருந்து எவ்வாறான மாற்றங்களை மேற் கொண்டிருந்தீர்கள் என்று பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "முழுமையான அசாதாரண சூழ் நிலையைக் கருதி அனைத்து ஊழியர்களது லீவுகளையும் இரத்துச் செய்தோம். பாதிக்கப்பட்ட உறவினர்களைப் பார்வையிடச் செல்லும் ஊழியர்களுக்கு லீவு அனுமதித்தோம். எமது நிர்வாக நடவடிக்கைகளுக்கு அப்பால் 26, 27, 28,ஆம் திகதிகளில் எமது ஊழியர்கள் அனை வரும் இரவு, பகல் பாராமல் கடமையுணர்வோடு பணியாற்றினர்" என்று கூறினார் அவர். செய்திகளை எவ்வாறு கையாண்டீர் கள் என்று குமாரதாஸனிடம் கேட்டேன்- "ஆரம்பத்தில் திகைப்பு, குழப்பம் என்பன செய்திகளைக் கையாள்வதில் இருந்தாலும், இதனைச் சுதாகரித்துக்கொண்டு அவ்வாறான திகைப்புகள், குழப்ப நிலைகள் எமது செய்தி வழங்கலில்பிரதிபலித்துவிடாதபடி இது ஒரு தேசிய அனர்த்தம் என்பதனால் நன்றாகச் செய்யவேண்டும் என்று தீர்மானித்து எமது மனநிலைகளைத் திடப்படுத்திக்கொண்டு வேலை செய்தோம்...." என்றார்அவர். "1985ஆம் ஆண்டு நவம்பரில் நிறுவப் பட்ட உதயனின் பணி இரண்டு தசாப்தங்களைத் தாண்டிச் செல்கிறது. ஆனால், எமது காலத்தில் இப்படியோர் இயற்கை அனர்த்தத்தைச் செய்தியாக்கும் அனுபவம் இதுவே முதற்றடவை. இலங்கை செய்தி ஊடகங்களுக்கும் இதுவே முதல் அனுபவம்" என்று சுட்டிக்காட்டினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன். போர் அனர்த்தமும் இராணுவ அட்டூழியமும் பற்றிய செய்திகளை நாளாந்தம் உடனுக்குடன் சூட்டோடு சூடாகப் பிரசுரித்த அனுபவம் எங்களுக்கு (உதயனுக்கு) உண்டு. ஆனால், சுனாமி சொல்லாமல் கொள்ளாமல் கொடுவினையாக வந்து ஒரு சிலமணி நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தியதால் அதன் செய்திக் கனதி பல மடங்காக இருந்தது. ஓரே நாளில் முழுப் பாதிப்புகளுக்கும் உடனடியாகப் பிரசுரம் தரமுடியவில்லை. செய்தியாளர்களால் ஒரே நாளில் ஒரே சுமையாகக் கொண்டு வரமுடியாமற் போயிற்று. அது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல என்பதே எனது கருத்து. மக்கள் இன்னலுற்று ஓடித் திரிந்த அன்று விசேட பதிப்பு வெளியிடுவது பொருத்தமற்றதுமாகும் - என்றார் அவர். தங்கள் பணியாளர்கள் யாராவது நேரடியாகச் சுனாமியால் பாதிக்கப்பட்டுள் ளார்களா என்று கேட்டு முடிப்பதற்குள்.... "மாயவர் என்று நாங்கள் சொல்லுகிற முத்துக்கிருஷ்ணர் அற்புததேவன் யாழ்ப்பாணத் தில் எஞ்சியிருந்த திறமைவாய்ந்த ஒரேயோர் அச்சியந்திரத் திருத்துநர். நண்பகலோ நடுச் சாமமோ என்று பாராமல் எங்கள் அச்சியந்திரங் களுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஓடோடி வருபவர். உதயனின் இடதுகரமாக இருந்தவர் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அவர் குடாநாட்டில் வெளிவரும் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அச்சியந்திரம் திருத்தும் பணியில் மிகவும் உதவியாக இருந்தவர். அவரை உதயனின் முழுநேர ஊழியராகக் கருதி அவருக்கு மாதச் சம்பளம் வழங்கிவந்தோம். அவர் எங்கு நின்றாலும் இல்லாவிட்டாலும் இயந்திரக் கோளாறினால் உதயன் இடப்படுகின்றான் என்றால், உடனே வந்து சேர்ந்துவிடுவார். வன்னிக்குக் கூடச் சென்று அச்சியந்தி ரங்களின் பழுதுகளைத் தீர்ப்பவர். அவர் தனது இரண்டு மகன்மாருடன் சுனாமி அலையால் அள்ளிச் செல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை எமது வலிகாமம் வடக்குச் செய்தியாளர் திரு.குகநேசன் எமக்கு அறிவித்தபோது அதிர்ந்துபோனோம். கீரிமலைக்குத் தமது தாயாரின் அந்தியேட்டிக் கிரியைகளை நிறை வேற்றுவதற்குச் சென்றிருந்த அவரும் அவரது பிள்ளைகளும் உறவினர்களுமாக மொத்தமாக 17 பேர் கீரிமலைக் கடலினால்அள்ளிச் செல்லப்பட்ட னர். மாயவரின் இழப்பை ஈடுசெய்வது மிகக்கடினமாக உள்ளது. அவருக்குத்தான் எமது அச்சியந்திரங்களின் நோயும் குணங்குறிகளும் வரலாறும் தெரியும். எந்தப் பிணியானாலும் அவர் உடனே கண்டறிந்து தீர்த்துவிடுவார். அவர் தனது தந்தையிடம் கற்றறிந்த கலை அது. அவரது இழப்பையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு உதயனின் இருநாள் வெளியீடுகள் சற்றுப் பிந்தின. ஏற்பட்ட அச்சியந்திரக் கோளாறு மீண்டும்எமக்குச் சுனாமியை ஞாபகப்படுத்தியது. எனினும், மாற்றுவழிக்காக முயற்சிக்கின்றோம்" என்று தெரிவித்தார். பிரதம ஆசிரியர் கானமயில் நாதன் அவர்கள். செய்திவழங்கும் பணிக்கும் அப்பால் சென்று உதயன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டமை பற்றி பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடியாக உதவவேண்டும் என்று எண்ணினேன். எங்கள் பத்திரிகை மக்களின் பத்திரிகை. அவர்கள் இன்னலுற்றிருக்கும்வேளை யில் நாம் உடனடி உதவி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் `உதயன் சுனாமி நிவாரணப்பணிக் குழுவை' எமது நிர்வாக இயக்குநர் திரு.ஈ.சரவணபவனின் ஊக்குவிப்புடன் அமைத் தோம். எமது சந்தைப்படுத்தும் பகுதி, விளம்பரப் பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்களை உடன் உதவும் பணியில் ஈடுபடுத்தினோம். அவர்கள் பலரும் இளவயதினர். இரவு, பகல் பாராது ஓடியோடி உழைத்தார்கள். எமது சொந்த மக்கள் பாதிப்புற்றிருக்கும்போது நாம் உடனடியாக முந்திக்கொண்டு உதவவேண்டும் என்ற மனித நேயம் அவர்களிடம் மிகுதியாக இருந்தது. எங்கள் சந்தைப்படுத்தல் முiகாமையாளர் சுரேஷ் தமது அணியினருக்கு உஷார்கொடுத்து மக்களுக்கு உதவுவதில் களைக்காமல் உழைத்தார். முதல் மூன்று நாள்களுக்கு இடம் பெயர்ந்த - பாதிக்கப்பட்ட - மக்கள் வாழும் முகாம் களில் சமைத்த உணவுப் பார்சல்களை வழங்கி னோம். உதயன் நிவாரணப் பணிக்கு உதவுமாறு மக்களிடம் பத்திரிகை மூலம் வேண்டுகோள் விடுத்தோம். எதிர்பாராத அளவுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுப் பொருட்கள், உடுதுணிகள், பால்மா வகைகள், பிஸ்கிட் பெடடிகள் முதலியன வந்து குவிந்தன. சிலர் மூடை மூடையாக அரிசி, மா முதலியவற்றை வழங்கினர். மருந்து வகைகளை நாம் கொள்வனவு செய்து வழங்கினோம். எம்மால் இயன்றளவு நிவாரணப் பொருள்களைச் சேகரித்து வழங்கி னோம். 26ஆம் திகதியிலிருந்து மூன்று வாரங்களுக்கு உதயன் நிவாரணப் பணி தொடர்ந்தது....." என்று விளக்கினார் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அவர்கள். உதயன் சுனாமி அனர்த்தம் தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள சில உளவியலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்களே என்று செய்தி ஆசிரியர் குமாரதாஸனிடம் கேட்டேன். "உளவியலாளர்களின் நிலைப்பாடு வேறு. செய்திகளை விடப் படங்களுக்கு ஊடாகவே தான் அழிவின் பரிமாணத்தை முழுமையாகக் கொண்டுவரமுடியும். இது ஒரு மாபெரும் மனிதப் பேரழிவு. இந்த அழிவின் மொத்த அளவில் 15 வீதத்தைக்கூட எமது கமெராக்கள் உள்வாங்கவில்லை. 85 வீதம் எம்மால் எவ்வித பதிவுகளுக்கும் உள்வாங்காமலே நடந்துமுடிந்த சோகமாகப் பேசப்பட்டு மறந்துவிடப் படும். அந்நிலையில், நடந்துமுடிந்த பேரனர்த் தத்தின் சாட்சியாக நாங்கள் படங்களைப் பிரசுரித் துத்தான் ஆகவேண்டும். படங்களைப் பிரசுரித் ததையிட்டு எமக்குத் திருப்தியே. இதில் அறவியல், ஒழுக்கவியல் என்பது எமது தீர்மானம், ஒப்பீட்டு அடிப்படையில் எந்தவகையில் சமூகத்துக்கு உதவப் போகிறது என்பதைப் பொறுத்தே! "அந்த வகையில் தான் உளவியல் அணுகுமுறைகளையும் எமது தீர்மானங்களையும் பார்க்க வேண்டும். இறந்தவர்களை, யாராவது அவர்களின் உறவினர்கள் அடையாளம் காண்ப தற்குக் கூட பத்திரிகைகளில் வெளிவரும் படங்கள் உதவியுள்ளன. என்ன நோக்கத்துடன் நாம் படங்களைப் பிரசுரிக்கின்றோம். என்பதில் விளைவு கள் தங்கியுள்ளன....." என்று மிகத் தீர்மானகர மான கருத்துகளை வெளியிட்டார் அவர். ஆற்றுப்படுத்தல் அணுகுமுறைகளுக்கு உங்கள் பத்திரிகை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றவகையில் கருத்துகள் உருவாகிவிட மாட்டாதா என்று வினவினேன். "இல்லை உருவாகமாட்டாது. இங்குள்ள சகல உளவியல் நிபுணத்துவ ஆற்றுப்படுத்தல் செயன்முறைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங் குகின்றோம். அவற்றுக்கு எமது பத்திரிகையில் போதியளவு இடம் ஒதுக்கிக்கொடுக்கின்றோம். உதாரணத்துக்கு, அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஆற்றுப்படுத்தல்செயற்பாடுகளைப் பற்றிப் பல விடயங்களைப் பிரசுரித்திருக்கிறோம்........ இப்போதும் கூட அந்த உதவியைச் செய்வோர் குறித்து வெளிப்படுத்தி வருகிறோம் என்று விளக்கினார் பிரதம ஆசிரியர். இயற்கை அனர்த்தம் தொடர்பான நிபுணத்துவ விடயங்களையிட்டு கருத்துகளைப் பெற்றுப் பிரசுரிப்பதற்காக யாரையெல்லாம் அணுகினீர்கள் என்று பிரதம ஆசிரியரிடம் கேட்டேன். "புவியியல் சார்ந்த அறிஞர் என்றவகை யில், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அணுகினோம். கொழுப்பிலிருக்கும் புவிச்சரிதவியல் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு பல அறிவியல் விளக்கங்களைப் பிரசுரித்தோம். இவ்வாறான நிபுணத்துவ விடயங்களைப்

க. வேல்தஞ்சன்

சுனாமியால் திறந்தவெளிச் சாக்காடாகிய ஆசியா !

செய்தி ஊடகத்துறையினரின் அறவியல், ஒழுக்கவியல் பற்றி பேசுகிறபொழுது ஐரோப்பாவுக்கு அமெரிக்காவுக்குமுரிய அறமும், ஒழுக்கவிய லும் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவிற்கும் செல்லு படியாகாதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்வியை ஆராய்வதற்கு கடந்த ஒரு தசாப்த காலத்துள் செய்தி ஊடகத்துறையி னரின் அதீத கவனத்தை ஈர்ந்த மூன்று சம்பவங்களை ஒப்பிடவேண்டியுள்ளது.
1997 செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற டயானா- டோடி ஜோடி சந்தித்த கார் விபத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியூயோர்க் இரட்டைக் கோபுரத்தின் மீது நடைபெற்ற தற்கொலை விமானங்களின் தாக்குதல், 2004 டிசம்பர் 26இல் ஆசிய நாடுகளை உலுக்கிய சுனாமிப்பேரழிவு ஆகிய மூன்று துயரச் சம்பவங் களின் போதும் அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்கள் நடந்துகொண்டவிதம், வகுத்துக் கொண்ட அறம், ஒழுக்கம் இவை பற்றி கவனிக்க வேண்டும். 9/11 நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து ஆறு மாதங்களின் பின்பு ஒரு சி.பி.எஸ் ஆவண நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று அத்தாக்குதலில் எரிந்து செத்துக்கொண்டிருந்த பெண்ணின் படத்தை தணிக்கை செய்தது. அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசை யொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், "அக்காட்சி மிகக் கொடூரமானது. அதைக் காட்சிப்படுத்து வதில்லை என்று முடிவு செய்தேன். எவராவது பார்க்க விரும்புகின்ற ஒன்றாக அது இருக்க வில்லை" என்றார். அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த மிகமோச மான அப்பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் செய்தி ஊடக வலைப்பின்னல் குறிப்பிடத்தக்களவு சரியான முறையையே பின்பற்றின. செய்திகளை வழங்குவதில் மானிட உணர்வுகளை மதித்தல், பாதிக்கப்பட்டவரின் அவலங்களையும் துயரங் களையும் மரியாதையுடன் அணுகுதல், அந்தரங் கங்கள், தனிப்பட்ட இரகசியங்களை காப்பாற்றும் அடுத்தவரின் விருப்பத்தை மீறாது நடத்தல் ஆகியவை பேணப்பட்டன. ஆங்கில மொழியிலே அவ் விடயங்களை அசோக் மலிக் எனும் ஊடக ஆய்வாளர் பின்வருமாறு கூறுகிறார்".................. 'ளுநளேவைiஎந உடிஎநசயபந', 'சநளயீநஉவ கரட டிக எiஉவiஅள' 'nடி எiடிடயவiடிn டிக யீசiஎயஉல': வாந ரெணண யீhசயளநள கடநற வாiஉம யனே கயளவ". 2004 டிசம்பர் 26ஆம் திகதிவரை இவற்றை நம்பக்கூடியதாக இருந்தது. 9/11 நியூயோர்க் தாக்குதலையடுத்து தொலைக் காட்சித் திரையில் அதில் கொல்லப்பட்டவர்களின் ஒரு சடலம் கூட காட்டப்படவில்லை. இச்சம்பவத் தின் கோபுரத்தை எதிர்காலத்தில் யாரேனும் பார்க்க விரும்பினால் கூட அதற்கான பதிவுகள் இல்லை. ஆனால் ஆசியாவின் சுனாமி மேற்படி அறங்கள், ஒழுக்கங்கள் எதுவும் செல்லுபடி யாகாத `திறந்த வெளிச் சாக்காட்டுக் களமாகி விட்டது'. டிசம்பர் 28ஆம் திகதி இரவு, சி.என்.என். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொலைக் காட்சி சேவை இலங்கை, தமிழ்நாடு, தாய்லாந்து ஆகிய பிராந்தியங்களில் சுனாமியால் இறந்தவர் களின் உடலங்களை அடுக்கடுக்காக வரிசை வரிசையாகக் காட்டியது. குழந்தையின் சடல மொன்றை ஒருவர் தூக்கிச் செல்வதையும் அதை வாங்குவதற்கு உறவினர்கள் விரைந்து செல்வதை யும் காட்டியது. இது தமிழ்நாடு அழிவுக்களமாக இருக்க வேண்டும். இறந்தவர்கள் உயிரோடு இருப்பவர் களைவிட மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதே மானிட தர்மம். இறந்தவர்கள் உயிரோடு இருந் திருந்தால் தாம் அவ்வாறு குலைந்த, கலைந்த அரையும் குறையுமான கோலங்களுடன் தொலைக் காட்சிக்காகப் படம் பிடிப்பதற்கு விரும்புவார்களா? ஆனால் சீ.என்.என். அதைச் துச்சமென மதித்து படம்பிடித்துக் காட்டியது. இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் தலைநகர் பன்ட ஆச் சேயின் சுனாமி அழிவுக் களத்துள் நிவாரணப் பணியாளர்கள் இறந்தவர் களை கால்களிலும், கைகளிலும் பிடித்து இழுத்துத் தாக்குவதையும் `கொற கொற' வென இழுத்து வருவதையும் தொலைக் காட்சியில் காண்பிப்பதற்கு ஏற்ற அமைதிப் பண்போ கௌர வமான அணுகுமுறைகளோ இல்லாதவகையில் சீ.என்.என். காட்டியது. வரிசை வரிசையாக சடலங்களையும் காட்டியது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பி.பி.சி., சீ.என்என்.ஐவிட மிகச் சிறியளவு திருத்தமாகச் செயற்பட்டது. 28ஆம் திகதி இரவுச் செய்தியறிக்கையில் துயரத்தால் நிலைகுலைந்த கணவனும், மனைவியும் மடிந்து போன தமது பிள்ளைகளைத் தூக்கிச் செல் வதைக் காட்டியது. பி.பி.சி இக்காட்சி ஆச்சே மாகாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுதான். இதன் மூலம் அரிவைச் சந்தித்த அக்குடும் பத்தினரின் உறவுகளின் துயரத்தை அதன் தனிப்பட்ட தன்மையை (பசநைஎந in யீசiஎயஉல) அந்த ஊடக நிறுவனம் மதிக்கத் தவறிவிட்டது என்று தான் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார் ஊடகத்துறை ஆய்வாளர் அசோக் மலிக். 1997 செப்ரெம்பரில் டயானா டோடி காதல் ஜோடிகளைப் பின்தொடர்ந்து சென்று, நடந்த விபத்தை அண்மையாக நின்று படம் பிடித்த பிரெஞ்சு செய்தியாளர்களை (பிரெஞ்சு மொழியில் செய்தியாளரை' (யீயயீயசயணணi' என்று அழைப்பர்) வைதுகொட்டிய மேற்கத்தய செய்தி யுலகம், ஆசியாவின் சுனாமிப் பேரழிவில் "பப்பராசித் தனமாகத்தான் நடந்து கொண்டது. சி.என்.என். சர்வதேச ஒளிபரப்புப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ் கிரேமர் என்ன கூறுகிறார் என்பதை அசோக் மலிக் வெளியிடுகிறார்" உலகத்தின் உங்கள் பகுதியில் நடைபெறுவது பெருங்கேடாகும். இறுதித்தொகை 100,000ஐ நெருங்கலாம். பாரியளவில் நிகழ்ந்த ஒரு இயற்கை அனர்த்தமே இது. விளக்கமாகவும், விரிவாகவும் செய்தித் தெரிவிப்பை நாங்கள் மேற்கொள்ளாவிட்டால், ஒரு செய்தி நிறுவனம் என்ற வகையில் நாங்கள் அசட்டைத்தனமாக இருந்ததாகவே முடியும்" என்று கிறிஸ் கிரேமர் சொன்னாராம். 9/11 நியூயோர்க் தாக்குதல் சம்பவத்தி லும் சுனாமி அனர்த்தத்திலும் சடலங்களை காட்சிப்படுத்தியதில் பாரிய வேறுபாடு இருந் தமை பற்றிக் கேட்கப்பட்டபோது 9/11 தொடர்பாக நாங்கள் இறந்த உடல்களைக் காட்டவில்லை யென்றால் அதற்கான காரணம் காட்டுவதற்கு உடல்களின் காட்சிகள் இருக்கவில்லை. உடல் கள் கருகிச் சாம்பலாகிவிட்டன என்றிருக்கிறார் சி.என்.என் இன் சர்வதேச ஒளிபரப்புப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர். 9/11 தாக்குதலுக்கு பின்னர் சி.என்.என். துயருற்ற குடும்பங்களின் தனிப்பட்ட விபரங் களுக்கும் அந்தரங்கங்களுக்கும் மதிப்புக் கொடுத்திருந்தது. ஆனால் இப்போது சுனாமி யையடுத்து அவ்வாறான அணுகுமுறை இருக்க வில்லையே என்று சொல்லப்பட்ட போது "நாங்கள் முற்றிலும் சரியானவர்கள் அல்ல, ஆனால் நாங்கள் தனிப்பட்ட அந்தரங்கங்களை மதிப் பதற்கு எப்பொழுதும் முயற்சிக்கிறோம். மரணத் தின் பின்னரான கௌரவத்தையும் மரியாதையை யும் வாங்க முனைகிறோம். படங்களை ஒளிபரப்பு வது என்பது கயிற்றில் நடப்பது போன்றது" என்று கிறிஸ் கிரேமர் கூறினார். சுனாமி செய்தி சேகரிப்பு, படங்களை ஒளிபரப்பியமை தொடர்பாக பி.பி.சி தனது கருத் தைக் கொண்டிருக்கிறது. பி.பி.சி. தென்னாசியப் பிரிவின் தலைமையதிகாரி போல் டானர் எமது செய்திக் கதைகளை உணர்ச்சி மயப்படுத்துவதற் காக சடலங்களை நாங்கள் காட்டவில்லை இவ் விடயத்தில் அனர்த்தத்தின் அளவை வெளிக் கொணர்வதற்கு சில சடலங்களைக் காட்ட வேண்டித்தானிருக்கிறது" என்று கூறுகிறார் என்பதை தெரிவித்துள்ளார் அசோக் மலிக். "கண்டிப்பான செய்திப்பீட கொள்யை" பி.பி.சி கொண்டிருக்கிறது என்று டானர் வலியு றுத்திச் சொன்னார். "பிரிட்டனிலோ அல்லது அயர்லாந்திலோ அல்லது இந்தியாவிலோ எங்கே என்றாலும் இறந்த உடல்களைக் காட்டுகின்ற போது கண்டிப்பான கொள்கையை கடைப் பிடிக்கிறோம். செய்தியின் பகுதியாக இறந்த உடல்களைக் காட்டவேண்டிய தேவையிருந்தால் காட்டுவோம். ஒளிப்படக் களஞ்சியங்களில் பேணப்படும் காட்சிகள் எனும் வகையில் திரும்பத் திரும்ப அவற்றை பி.பி.சி ஒளிபரப்புவதில்லை. ஒரு கார் விபத்தை எடுத்துக் கொண்டால் உருக் குலைந்த உடல்களை நாங்கள் காட்டுவதில்லை. மடிந்து போன சிறுவர்களின் உடல்களையும் நாங்கள் காட்டுவதில்லை என்றும் அவர் பி.பி.சி. நிலைப்பாட்டை கூறுகிறார்.

க. வேல்தஞ்சன்

சுனாமிக் களத்தில் செய்தியாளனாக....

வழமையானதோர் ஞாயிற்றுக்கிழமை போலவே அன்றும் இருந்தது. விடுமுறை நாளான போதும் முதல் நாளான கிறிஸ்மஸ் தின கொண்டாட்டங்கள் கிராமத்தினில் ஓய்ந்த பாடில்லை. 9.30 மணிக்கு ஆரம்பமாகும் வகுப்பிற்கு சற்று தாமதமாகவே செல்வதாக முன்தின இரவு தீர்மானித்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. வருடந்தோறும் நடாத்தப்படும் சமயம் சார்ந்த மாணவர்களிடையேயான பரீட்சை யொன்றிற்கான மேற்பார்வையாளராக வந்து உதவுமாறு முன்தினம் இரவுதான் அலுவலக நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர். நட்பின் நிமித்தம் பரீட்சை நடக்கும் உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை நோக்கி காலைவேளை புறப்பட்டேன். வழமை போலவே என்னுடன் இணைபிரியாத கமராக்கள் அடங்கிய "பாக்" உம் தோள்களில் ஏறிக்கொண் டது. பரீட்சைகள் திட்டமிட்டபடியே காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிவிட்டது. விடைத் தாள்களையும், கேள்விப்பத்திரங்களையும், வழங்கிக் கொண்டிருந்த அந்த அவசரகதியான வேளையில் சுமார் 10 மணியளவில் மழையிருட்டு போன்று மேகம் கறுத்திருந்தது. சாதுவான தூறலும் ஒரு புறத்தே பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் ஏனோ இனந்தெரியாத ஓர் அமைதி ஒரு புறத்தே நீடித்துக்கொண்டிருக்க மறுபுறத்தே அருகிலுள்ள வல்லைக் கடலில் ஓவென இரைச்சல் சத்தம். கடல் பக்கம் கடும் காற்றுப்போல இருக்கின்றது என சக நண்பரிடம் கூறிவிட்டு மேற்பார்வையில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த அமைதியான சூழலை கிழித்துக் கொண்டு இளைஞர்கள் சிலர் பரீட்சை மண்டபத்தி னுள் விரைந்து வந்தனர். அவர்கள் மிகவும் களைத்துப்போயிருந்தனர். முகங்களில் அச்ச உணர்வு மேலோங்கி நின்றது. என்னவென விசாரிப்பதற்காக அவர்களை நோக்கி விரைந் தேன். "அண்ணா கடல் ஊருக்குள் வந்து விட்டது. இப்ப தீருவில் தூபி தாண்டி வந்து கொண்டிருக்கிறது. எங்கட ஊர் பிள்ளையளும் பரீட்சை எழுதுகினம் அவையை எங்களோட அனுப்பிவிடுங்கோ" என்றனர் அவர்கள். ஆமி வருகின்றான் என்றோ அல்லது சண்டை தொடங்கிவிட்டது என்றோ கேள்விப்பட்டு பழகிப் போன எங்களிற்கு இது ஓர் புரியாத கதையாக இருந்தது. ஆனாலும் பிள்ளைகளை பத்திரமாக வீடுகளிற்கு அனுப்பி விட்டு ஒரிரு வினாடி களிற்குள்ளாகவே வல்வெட்டித்துறை நோக்கி எனது மோட்டார் சைக்கிளில் விரைந்தேன். வீதிக்கு வந்த வேளையில் தான் நிஜம் உறைத்தது. நனைந்த கோழிக்குஞ்சுகள் போல் மக்கள் உடுப்பிட்டிப் பக்கம் விரைவாக ஓடி வந்துகொண்டி ருந்தனர். அவர்கள் வந்த பாதை நோக்கி விரைந்து கொண்டிருந்த வேளையில் ஓடிவரும் மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கோண்டேயிருந்தது. தாண்டிச் செல்லும் வேளையில் செல்லுமி டத்தில் என்ன இருக்கப்போகின்ற தென்று ஏதுமே தெரியாத போதும், ஓரமாக எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஓடிவரும் மக்களை முதலில் கமராக்கள் மூலம் பதிவுசெய்தேன். பின்னர் தொடர்ந்தும் வல்வெட்டித்துறை சந்தியை அண் மித்த வேளையில் இளைஞர்கள் சிலர் நின்று போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டி ருந்தனர். குறிப்பாக வேடிக்கை பார்க்க வரும் கும்பல்களை அடித்து விரட்டுவதில் அவர்கள் விழிப்பாக இருந்தார்கள். ஏற்கனவே அவர்களிற்கு பரிச்சயமான முகம் என்பதால் உட்செல்ல என்னை அனுமதித்த அவர்கள், பல தடவைகளாக கவனமாக இருக்கு மாறு ஆலோசனை கூறியே அனுப்பிவைத்தனர். கடற்கரைக்கு செல்லும் சிறிய வீதிகள் எங்கும் இடிபாடுகளால் மூடப்பட்டுவிட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை பிரதான வீதியோரமாக நிறுத்திக்கொண்டேன். ஏற்கனவே பழகிப்போன அந்தப் பகுதிக்குள் ஏனோ இன்று மட்டும் அந்நியப்பட்டு நிற்பது போன்ற உணர்வு. கமராக்களை தயார் செய்து காட்சிகளை பதிவு செய்தபடி கரை நோக்கி வருகின்றேன். உயிரிழந்த தந்தையை தூக்கிவரும் தனயன் ஒரு புறம், காயமடைந்த மனைவியை தூக்கியவாறு, தனது கைகளில் இரு சிறுபிள்ளைகளையும் இழுத்தவாறு ஓடி வரும் குடும்பத் தலைவன் ஒருபுறம். வழக்கமாக செய்தி சேகரிப்பிற்கென வந்து பழகிப்போன இடங்களே அவை. என்ன தான் நடக்கின்றதென புரிய வில்லை. அதை விளக்கிச்சொல்ல அவர்கள் எவருமே தயாராகவுமில்லை. ஆனாலும் ஏதோவொரு அசட்டு துணிச்சலுடன் கரை நோக்கி விரைகின்றேன். எத்தனை முறை கண்ட கடல். கரையோர வீடு கள். வியாபாரிகளாலும், மக்களாலும், மீனவர் களாலும் அமளிப்படும் அந்த கடற்கரை செத்துக் கிடந்தது. கடலிற்குள் நின்ற படகுகள் இன்று குடியிருப்புகளிற்கு நடுவே வீடுகள் இடிந்து தரைமட்டமாகி கிடக்கின்றது. கடல் கொண்டு வந்த மீன்கள் இன்னும் செத்துப்போகாமல் கிடந்து துடிக்கின்றன. உயிரிழந்த உறகளுக்காக அலறும் உறவுகள். காயமடைந்தவர்களது வலிகளுடனான கதறல்கள் என அப்பகுதி யெங்கும் ஒரே ஓலம். எல்லாவற்றையும் மேவி கடல் தாய் குமுறிக்கொண்டேயிருக்கிறாள். என்றுமே பார்த்திராத மாதிரி கடல் நீர் கரிய கறுப்பு நிறமாகவும், நீர் மட்டம் உயர்ந்தும், தணிந்து மென அரக்கியாய் நின்றாள். என்னைக் கண்டு கொண்ட மீனவசங்கப் பிரதிநிதியான குட்டித்தம்பி நான் நின்ற இடம் நோக்கி விரைந்து வந்தார். "அண்ணா மீண்டும் கடல் கொந் தளிக்கிறது, எந்த நேரமும் அலையடிக்கலாம். மீண்டும் தாக்குமுன் பாதுகாப்பாக வெளியேறி விடுங்கள்" என கூறியவாறு சகமீனவர்களை பாதுகாப்பிற்காக என்னு டன் நிற்கச் சொன்னார். எதை பதிவு செய்வது எதை விடுவது என முடிவு செய்யவோ, சிந்திக்கவோ நேரமில்லை. இயந்திர கதியில் முடிந்தவற்றை பதிவு செய்தபின் அங்கிருந்து வெளியேறி வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையினை நோக்கி விரைகின்றேன். ஆட்களற்ற சூனியப்பிரதேசமாக வீதி கள், அங்குமிங்கும் அச்சத்துடன் ஓடிக்கொண்டி ருக்கின்றேன். வைத்தியசாலையெங்கும் ஒரே அழுகுரல். கணப்பொழுதினில் உயிரிழந்த உறவுகளது உடல்கள் மீது அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச் சையேதுமின்றி வலிதாங்காது கத்திக்கொண்டி ருந்தனர். அம்புலன்ஸ் வண்டி கூட அற்ற நிலை யில் மீன் ஏற்றும் டிரக் வண்டிகளில் காயமடைந்த வர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதில் இளைஞர்கள் சிலர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். சற்று முன்னர் வந்து திரும்பிய கடல் நீர் மீண்டும் அங்கு வரலாமென்ற அச்சம் அனைவருக்கும். அங்கிருந்து வெளியேறிய நான் வல்வெட்டித்துறைக்கு அண்மித்துள்ள வல் வெட்டி பகுதிக்கு விரைகின்றேன். கைத்தொலை பேசிகள் தொடர்பு இழந்த நிலையில் தொலை பேசி வசதி இணைப்புடைய வீடொன்றுள் நுழைகின்றேன். உரிய அவகாசமேதுமற்ற நிலை யில் 10.30 மணிக்கு எனது அவதானிப்புகளை "சூரியன் எப்.எம்" வானொலியில் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக நேரடியாக நேயர்களுக்கு அஞ்சல் செய்கின்றேன். என்ன சொன்னேன் என்று இப்பொழுது கூட எனக்கு ஞாபகம் வர வில்லை. பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை, மணற்காடு மற்றும் குடத்தனை என எல்லாப் பகுதிகளிற்கும் விரைந்த பின் இறுதியாக மந்திகை வைத்தியசாலைக்கு விரைகின்றேன். பிரேத அறையெங்கும் நிரம்பி வழியும் சடலங்களும் காயமடைந்தவர்களது வேதனையுடன் கூடிய முனகல்களும் அழுகையுமாக அங்கு சொல்லில் வடிக்கமுடியாத உணர்வுகள். அந்தவோர் நிலையிலும் சக பத்திரிகை நண்பர்களை கண்டு கொண்டதில் ஓர் இனம்புரியாத நம்பிக்கை. இயந்திரக்கனமாய் செய்திகளை பதிவு செய்து கொண்டேயிருக் கின்றேன். எல்லோரிடமும் ஒட்டுமொத்தமாக ஓர் வெறுமையான உணர்வே தலைதூக்கியிருந்தது. எவருக்கும் எவரும் ஆறுதல் செய்யும் நிலையில் இல்லை. தொடர்ந்தும் எடுத்த செய்திகளையும் படங்களையும் எனது ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஈடுபட்டிருந்தேன். வெறுமையான அந்த நாட்களில் உணவு, உறக்கம் இழந்து பணிகளை மேற்கொண்டிருந்தேன் என்பதே உண்மை. ஆனாலும் தமது உறவுகளுக்காக ஒன்றுபட்டு பாடுபட்ட எனது தமிழ் மக்களது அர்ப்பணிப்பு நெக்குருக வைத்தது. அவர்களுள் நானும் ஒருவனாகிப் போனமையே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அத்துடன் உறவுகள் பற்றி கவலையுடன் இருந்த சர்வதேச நாடு களிலுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே இயலுமான வகையினில் செய்திகளை கொண்டு சென்றமையும் மனதுக்கு ஓர் திருப்தியினை அளித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சொந்த உறவுகளது அவலம் கண்டு திரண்டெழுந்த தமிழ் சமூகத்தை. திரண்டெழவைத்ததில் ஊடகங்களிற் கும் பங்குண்டு என்ற வகையில் அது எனக்கும் ஓர் திருப்திகரமான தொழிலாகவே அமைந்தது.

நெஞ்சை உலுக்கும், குருதியை உறைய வைக்கும் அனுபவம்

எங்களுடன் பணியாற்றும் செய்தியாளர் ஒருவரும் நானும் செய்தி சேகரிப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றி ருந்தோம். வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரை சந்தித்து உரையாடி விட்டு அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தோம். அப்போது அம்புலன்ஸ் வண்டி ஒன்று அபாய ஒலியை எழுப்பியவாறு முகப்பு வெளிச்சம் போட்ட வாறு மிகவேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் வேறு இரண்டு வாகனங்களும் முகப்பு வெளிச்சம் போட்டவாறு வந்து கொண்டி ருந்தன. என்ன சம்பவம் நடந்திருக்கும் என்று சிந்தித்தவாறு நாங்கள் மீண்டும் வைத்திய சாலைக்குள் போய் அம்புலன்ஸ் வண்டியைப் பார்த்தோம். அதைப்பார்த்தவுடன் திகைத்துப் போனோம். பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஆறுக்கும் அதிகமானவர்கள் நனைந்த நிலையில் தலைமுடிகள் எல்லாம் கற்சல்கள் செருகிய நிலையில் அலங்கோலமாக இருந்தார் கள். என்ன சம்பவம் என்பதை அறிவதற்காக முயன்றேன். எவரும் பேசக்கூடிய நிலையில் இல்லை. அவர்கள் அனைவரும் "ஐயோ என்ர பிள்ளையள்" எண்டு கதறியழுது கொண்டி ருந்தனர். இந்த நிலையில் என்ன சம்பவம் நடந்தி ருக்கும் என்பதை அறியமுடியவில்லை. அம்புலன்ஸ் சாரதியிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன். "கடல் பெரிசா பெருகி கனசனம் கடல லோட அடிபட்டு போட்டுதுகள்" என்றார். உடனடியாகவே நானும் சக செய்தி யாளனும் எங்கள் மோட்டார் சைக்கிளில் வடம ராட்சி கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் எல்லாமே முகப்பு வெளிச்சம் போட்டவாறு காயமடைந்தவர் களை வைத்திய சாலைப்பக்கம் நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தன. அதை எல்லாம் பார்த்தபோது விளைவு பெரிதாக இருக்கும் என்று நினைத்து இன்னும் வேகமாக பயணித்தோம். ஒருவாறு புதுக்காட்டுச் சந்தியை சென்ற டைந்தபோது அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதறிக்கொண்டிருந்தனர். அதையும் தாண்டி வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் கரைக்கு சென்று விட்டோம். முன்னர் நாங்கள் போனபோது இருந்த கட்டடங்கள் எதுவுமே இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. பிரதான வீதியை தவிர உள்வீதிகள் எங்குமே செல்லமுடியாமல் இருந்தது. வீதி எங்கிருந்தது வீடு எங்கிருந்தது ஒன்றுமே தெரியவில்லை. எல்லாம் சுடுகாடு போல இருந்தது. இந்த நிலையிலும் ஆங்காங்கே கிடந்த சடலங்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு மீட்புப் பணியாளர் வந்து கொண்டிருந்தனர். அந்தப் பகுதிகள் எல்லாம் பார்க்கமுடியாதவாறு சிதைந்துபோய் இருந்தது. கடல் அடியில் தவறவிட்ட தமது உறவுகளை தேடி கதறி அழுது கொண்டிருந்தனர் பலர். இவை எல்லாவற்றையும் பார்க்க எனக்கு தலை சுற்றியது. குண்டுவீச்சுகளில், வீதி விபத் துக்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தான் பார்த்திருப்போம். இப்படி பெருமளவான சடலங்களை ஒரு நாளும் பார்த்ததே இல்லை. இப்படியே மருதங்கேணி வைத்தியாசலைக்கு போனோம். அங்கே உயிரிழந்தவர்களின் உடல்கள் அலங்கோலமான நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்களின் அருகில் ஒரிருவர் இருந்து புலம்பி அழுது கொண்டிருந் தனர். சிலர் இறந்து போன தங்கள் பிள்ளை களை தூக்கி மடியில் வைத்து முத்தமிட்டு அழுது கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகளை பார்க்க முடியாமல் இருந்தது. எங்கும் மரண ஓலம் காதை கிழித்துக் கொண்டிருந்தது. இப்படி இருக்க மீட்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் "முல்லைத்தீவுப் பக்கம் சரியான இழப்பு" என்ற செய்தியை சொன்னார். அதை கேட்ட உடனேயே நாங்கள் இருவரும் 12.20 மணியளவில் முல்லைத்தீவை நோக்கி பயணிப்பதற்காக வடமராட்சி கிழக்கு தாழையடியில் இருந்து புறப்பட்டு புதுக்குடியி ருப்புச் சந்தியை சென்றடைந்தோம். புதுக்குடியி ருப்புச் சந்தி எங்கும் சனம் வெள்ளமாக அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தனர். புதுக்குடியி ருப்பு வைத்தியசாலையை சென்றடைந்தோம். வைத்தியசாலை எங்கும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை பணியாளர்களுடன் போராளிகள் மற்றும் தொண்டர்கள் என பெருமளவிலானவர்கள் இணைந்து கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். வைத்தியசாலை நிறைந்து வழிந்த சம்பவம் அதன் நீண்ட கடுமையான வரலாற்றில் அன்றுதான் நடந்திருக்கும். முல்லைத்தீவு பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு இறந்தவர்களின் சடலங்கள் எதுவும் 1.30 மணிவரை வரவில்லை. அப்படியே நாங்கள் எங்கள் பயணத்தை தொடர்ந்து முல்லைத்தீவுக்கு செல்கின்ற வட்டுவாகல் பாலத்தை சென்றடைந்தோம்.பாலத்திற்கு அங்கால் எவ ரும் செல்லமுடியாது என அந்தப் பகுதியில் கடமை யில் நின்ற காவல் துறை உறுப்பினர் எங்களை மறித்து விட்டார். அவருக்கு நாங்கள் ஊடகவியலாளர்கள் "உள்ளுக்கு போக வேணும்" என்று கூறினோம். அதற்கு அவர் அண்ணா "கடல் திடீர் எண்டு அடிக்குது அதாலதான் மறிக்கிறம். உங்கால போறது ஆபத்து" என்றார். நாங்கள் விடாப்பிடி யாக நின்று கதைத்தபோது அவர் மேலதிகாரி யுடன் தொடர்பு கொண்டு கதைத்த பிறகு எங்களை "அவதானமாக பார்த்துப் போங்கள்" என்றார். ஒருவாறு அனுமதி பெற்று பாலத்தடிக் குப் போனோம். பாலத்தை பார்க்கவே பயமாக இருந்தது. நாங்கள் எத்தனை தடவை பயணித்தி ருப்போம். பாலத்தின் கீழ் பாறைகள் தான் தெரிந்தன. இப்போது பாலத்தின் விளிம்பில் முட்டியவாறு கடல் அடித்துக் கொண்டிருந்தது. வட்டுவாகல் பாலத்தின் ஒரு கரையில் பெரிய பனைமரங்கள், பற்றைகள் என்றெல்லாம் வந்து அடைந்து கிடந்தன. மொத்தத்தில் பாலத்தின் ஒரு கரை விளிம்பில் புதிதாய் காடு வளர்ந்த மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் பாலத்தின் பலபாகங்களில் வெடிப்புக்கள் இருந்தன. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு போக பாலத்தில் இரண்டு இடங்களில் ஐந்தடி அகலம் இருக்கும் உடைந்த நிலையில் மண் மூட்டைகளாலும் கல்லுகளாலும் அடைக்கப்பட்டிருந்தது. கடல் அடித்தவேகத்தில் பாலம் உடைந்திருக்க வேணும் பிறகு மீட்பு பணியாளர்கள் அதை சீர்செய்திருப் பார்கள். இப்படியே பாலத்தில் நின்று பார்க்க கடல் அலை குமுறி அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இந்தப் பாலத்தை தாண்டிப் போனபிறகு கடல் பெருகிவந்தால் நாங்கள் திரும்பி வரமுடியாது. அதை நினைக்கும்போது மனதில் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்ன நடந்தது என்பதை அறியவேண்டும் என்பதற்காக உள்ளே போய்விட்டோம். அப்படியே செல்வபுரம் கின்னத்தங் காட்டு கிறவல் பாதையால் போகலாம் என்று போய்கொண்டிருந்தபோது கடற்கரை பக்கத்தில் இருந்த வீடுகள் எதையுமே காணவில்லை. கிரவல் வீதி பெரிய வாய்க்கால்களாய் உடைந்து போய் இருந்தது. ஒரு கட்டத்துக்கு அங்கால மோட்டார் சைக்கிளில் போகமுடியாதபடி இருந்தது. மக்கள் நடமாட்டம் எதுவும் இருக்க வில்லை. மீட்பு பணியாளர்கள் தான் தனியாக நின்று சடலங்களை எடுத்து ஓரிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தனர். அந்தச் சடலங்களில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாமே கிடந்தது. அதைப்பார்த்திட்டு மீட்பு பணியாளர்களிடம் பேசினோம். "தப்பி இருந்தாக்கள் எல்லாரையும் எடுத்திட்டம் இப்ப செத்துக்கிடந்த உடலங்களை எடுக்கிறம்" என்றார். அந்த கிரவல் வீதியால் பயணிக்க முடியாமல் போக வட்டுவாகல் பாலத்துக்கு திரும்பிவந்து சுத்திப்போற தார் வீதியால் முல்லை நகரப்பகுதிக்கு போய்க் கொண்டிருந்தம். முல்லைத்தீவு விளையாட்டு மைதானத் தடிக்கு போறத்துக்கு கொஞ்சம் முன்னுக்கு தார் றோட்டெல்லாம் பெரிய கிடங்காய் கிடந்திச்சுகடல இருந்து முக்கால் மைல் தூரத்தில இருக்கிற இந்த பாதைக்கே இந்த நிலை எண்டால் உள்ளுக் கிருந்த சனங்களுக்கும் அவயின்ர வீடுகளுக்கும் என்ன நிலைமை என்பதை ஊகித்துக் கொண் டோம். அப்படியே விளையாட்டு மைதான வளவடிக்கு வர மைதானம் முழுக்க வெள்ளக் காடாய் இருந்தது. கடல்ல இருந்து சின்னாத்துப் பாலத் தால வாற தண்ணி அப்படியே ஒரு தடையும் இல்லாமல் வந்து றோட்டை மேவிப்பாஞ்சு மைதானத்தால அங்கால போய்க்கொண்டி ருந்தது. அந்த தண்ணி இரண்டடி உயரத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒருவாறு அதையும் கடந்து முல்லைநகரை சென்றடைந்தோம். எனக்கு தலை சுற்றியது. இதயம் நின்றுவிடும் போல கிடந்தது. அந்தளவுக்கு எல்லாமே கல்குவியலாக இருந்தது. எந்தக் கட்டடமும் இல்லை. மரங்கள் எல்லாம் வேருடன் சாய்ந்து போய் இருந்தது. ஐஸ்வான் லொறிகள் எல்லாம உருண்டு பிரண்டு போய்க் கிடந்தன. எதையும் பார்க்க இயலாமல் இருந்தது. இரண்டு புதிய பெரிய பேருந்துகள் பிரண்டுபோய் இருந்தன. பேருந்துக்குள் எல்லாம் கஞ்சல்கள் குவியலாய் கிடந்தது. அப்படியே முல்லைத்தீவு கடற்கரையில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தடிக்குப் போவ தற்கு முயற்சித்தோம். கடல் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்பு மட்டும் தான் இருந்தது. வேறு எதையும் காணவே இல்லை. கடல் கரையில் சிறிய வீடு கட்டி கனக்கச் சனம் இருந்தது. அதுகள் இருந்த இடமே தெரியாமல் தண்ணி நின்றது. மீட்புப் பணியாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் இருந் தும் தண்ணிக்குள்ள இருந்தும் உடலங்களை தூக்கி கொண்டிருந்தினம். அந்தப் பகுதி எல்லாம் வாழ்ந்து திரிந்த அந்த மக்கள் பனை வடலியளுக் குள்ளும் இராணுவமுட் கம்பிகளுக்குள்ளும் சிக்குப்பட்டும் செருகுப்பட்டும் கிடந்தார்கள். இப்படி எங்க பாத்தாலும் இறந்த உடல்கள். ஒரு தாய் தனது பிள்ளையுடன் நுளம்பு வலைக்குள் சிக்குப்பட்டுப் போய் சடலமாக கிடந்தார். மீட்பு பணியாளர்கள் எல்லாப் பக்கத்தாலையும் சடலங் களை தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஏதோ வித்தியாசமான நரக உலகத்தில் நிற்கிறோம் என்பது போல இருந்தது. நேரம் 4.45 மணி "கடல் திரும்பவும் வேகமாய் வந்து அடிச்சுப் போட்டுது தண்ணி வந்து கொண்டிருக்குது ஓடுங்கோ" என்று மீட்புப் பணியாளர்கள், எல்லாரையும் அனுப்பிக் கொண்டு தாங்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்களுடைய மோட்டார் சைக்கிளை இயக்கினோம். அது இயங்கமறுத்து விட்டது. இப்ப என்ன செய்யிறது பாத்துக் கொண்டு இருக்க கடல்பெருகிவந்து கொண்டிருந் தது. இப்ப என்ன செய்யிறது? எங்கள் கால்களை தடவின மாதிரி தண்ணி தடவிக்கொண்டு எங்களை தாண்டிப்போனது. நானும் சகபணியா ளனும் மீட்பு பணியாளர்களும் சேர்ந்து மோட்டார் சைக்கிளையும் தள்ளிக்கொண்டு ஆபத்தான பிரதேசத்தில் இருந்து வெளியேறி வந்து விட்டோம். அதற்கு பிறகு ஒருத்தரையும் போகவிடவில்லை. அந்தளவுடன் ஆபத்தான சாக்களத்தில் இருந்து மீண்டு புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்கு வந்து வாட்டுக்குள் போனோம். இரண்டு பெரிய நீளமான வாட் முழுக்க இறந்தவர்களின் சடலங் கள் நிரலாய் அடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில் லாமல் இன்னும் உழவு இயந்திரங்களில் வந்து இறங்கினபடியே இருந்தது. நேரம் இரவு 7.00 மணியாகிவிட்டது. சடலங்களால் குவிந்து போய் இருந்த வாட்டுகள் இரண்டுக்குள்ளும் பெருமள வானவர்கள் குவிஞ்சு நிண்டு தங்கட பிள்ளை களையும், உறவினர்களையும் என ஒவ்வொன்றாய் தேடிக்கொண்டிருந்தார்கள். சிலர் இனங்கண்ட சடலங்களுக்குள் நின்று கதறி அழுது கொண்டி ருந்தனர். பார்க்க பயங்கரமாய் இருந்தது. இந்தளவுடன் நிறுத்திவிட்டு அலுவல கத்தை வந்தடைந்தோம். அங்கு வந்ததும் இந்த கோரத்தை மனித அவலத்தை எல்லாம் எப்படி செய்தியாக்குவது என்பதே தெரியாமல் இருந்தது. அந்தளவுக்கு கண்டசம்பவங்கள் என்னை வெகு வாக பாதித்திருந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைச் செய்தியாளர்கள்

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும் தென்மாகாணத்திலும் மாகாணச் செய்தியாளர் கள் 121 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 1000 குடும்ப உறுப்பினர்கள் சுனாமியால் இடம்பெயர்ந் துள்ளனர். இவர்கள் முகாம்களிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ தங்கியுள்ளனர். இலங்கையில் மொத்தமாக 2121 மாகாணச் செய்தியாளர்கள் பல்வேறு ஊடகங் களுடனும் பணியாற்றுகின்றனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமான தொகையினர் சுனாமி பாதித்த 14 மாவட்டங்களையும் சேர்ந்தவர் கள் தான். செய்தியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக் கள் தொடர்பான புள்ளிவிபரமொன்று, மாகாணச் செய்தியாளர்களின் 48 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன என்றும், 53 புகைப்படக் கமராக் களும் ஏழு தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் கமராக்களும், மூன்று பக்ஸ் இயந்திரங்களும், 16 ஒலிப்பதிவுக் கருவிகளும், 11 மோட்டார் சைக்கிள் களும் மூன்று சைக்கிள்களும், ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் செய்தி சேகரிப்பின் போதோ அன்றேல் அவர்களின் வீடுகளிலோ தொலைந் தோ சேதப்பட்டோ உள்ளன என்றும் கூறுகிறது. செய்தியாளர்களின் வாழ்விட, உபக ரண இழப்புக்களை மீள வழங்குவதற்கு ஏறத்தாழ 21 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் என்று இலங்கை சூழலியல் செய்தியாளர்கள் மன்றம் (கூhந ளுசiடுயமேய நுnஎசைடிnஅநவேயட துடிரசயேடளைவள குடிசரஅ) கூறுகிறது. "சில செய்தியாளர்கள் தமது குடும்பங் களை இழந்துள்ளனர். அவர்கள் தமது வீடு களை இழந்துள்ளனர். அவர்கள் தாம் வைத்தி ருந்த அனைத்தையும் இழந்துள்ளனர்" என்று அம்மன்றத்தின் இணைப்பாளர் தர்மன் விக்கிர மரட்ண கூறினார். மூன்று அணிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட பிரதேசங்களுக்குள் சென்று மாகாணச் செய்தியாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தன. அது ஒரு "பெரிய இழப்பு" என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட 121 மாகாணச் செய்தி யாளர்களில் இருவர் சுனாமியால் காணாமல் போயுள்ளனர். இருபத்திமூன்று பேர் தெற்கிலும் கிழக்கிலும் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 121 பேரில் 97 பேர் அச்சு ஊடகத்துறையிலும் ஏனையவர்கள் இலத்திரனியல் ஊடகத்துறையி லும் பணியாற்றுகின்றனர். சுனாமியால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த நிலையிலும் இந்த மாகாணச் செய்தி யாளர்களில் பலர் தமது கடமை தவறாமல் சுனாமி பற்றிய செய்தித் தெரிவிப்பை ஒழுங்காக மேற் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் பணியாற் றும் ஊடகநிர்வாகிகள் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உடனடியாக உதவிகள் சென்றடையவில்லை யாயினும் பிந்திய நிலையிலாயினும் பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு தரப்புகளும் உதவி வருகின்றன.

Eluthani - the Lab Newspaper of MRTC to be relased on March 18 2005

Eluthani, the lab newspaper of Media Resources and Training Centre would be released on March 18 2005.